இளநீர், தேங்காயை பாதுகாக்க தென்னை மரத்தில் பாம்பு ஓவியம்

சிங்கம்புணரி அருகே தென்னை மரத்தில் காய்த்த இளநீர் மற்றும் தேங்காய்களை குரங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் முயற்சியாக அப்பகுதி விவசாயிகள் தென்னை மரத்தில் பாம்பு ஓவியம் வரைந்துள்ளனர்.

Update: 2022-11-25 18:45 GMT

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி அருகே தென்னை மரத்தில் காய்த்த இளநீர் மற்றும் தேங்காய்களை குரங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் முயற்சியாக அப்பகுதி விவசாயிகள் தென்னை மரத்தில் பாம்பு ஓவியம் வரைந்துள்ளனர்.

தென்னை விவசாயம்

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்தது. இந்த தொடர் கனமழையால் மாவட்டங்களில் உள்ள குளங்கள், கண்மாய், ஊருணிகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதையடுத்து இப்பகுதி விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றர். சிங்கம்புணரியை அடுத்த பிரான்மலை, ஒடுவன்பட்டி, வேங்கைப்பட்டி, மேலவண்ணாயிருப்பு, கிருங்காங்கோட்டை மற்றும் எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிழவயல், செட்டிக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகள் கண்மாய்களில் நிரம்பிய தண்ணீரை பயன்படுத்தி விவசாயத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சில விவசாயிகள் கிணற்று பாசனத்துடன் கூடிய வயல்களில் துவரை, நெல், கரும்பு, தென்னை, கடலை உள்ளிட்ட பயிர் வகைகளையும் பயிரிட்டு பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் ஒடுவன்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகள் கிணற்று பாசனத்தில் நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை வைத்து பாதுகாத்து வருகின்றனர். தற்போது இந்த தென்னை மரங்களில் ஆயிரக்கணக்கான இளநீர் மற்றும் தேங்காய்கள் காய்த்து உள்ளன.

குரங்குகள்-அணில்கள்

இந்நிலையில் பிரான்மலை காட்டு பகுதியில் ஏராளமான குரங்குகள் மற்றும் அணில்கள் இந்த தென்னை மரத்தை தேடி வந்து தென்னை மரத்தில் ஏறி அறுவடைக்கு தயாராக உள்ள இளநீர் மற்றும் தேங்காய்களை சேதப்படுத்தியும், அதில் உள்ள தண்ணீரை குடித்தும், தேங்காயை உடைத்து சாப்பிட்டு செல்வதால் விவசாயிகளுக்கு தென்னை விவசாயத்தில் பலத்த நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து தென்னை விவசாயிகள் தரப்பில் தென்னை மரத்தில் காய்த்துள்ள இளநீர் மற்றும் தேங்காய்களை குரங்குகளிடம் இருந்தும், அணில்களிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் தென்னை மரத்தில் பாம்பு நெளிவது போன்ற ஓவியத்தை தனித்தனியாக ஒவ்வொரு தென்னை மரத்திலும் பெயிண்டு மூலம் வரைந்துள்ளனர்.

இந்த ஓவியத்தை காணும் குரங்கு மற்றும் அணில்கள் தென்னை மரத்தில் பாம்பு நெளிந்து மேலே ஏறுவது போன்று உள்ளதால் நிஜபாம்புதான் என நினைத்து பயந்துபோய் மரத்தில் ஏறாமல் அங்கிருந்து சென்றுவிடுவதாக விவசாயிகள் கூறினர்.

பாதுகாப்பு

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:- இந்த பகுதியில் உள்ள தென்னை மரத்தில் உள்ள தேங்காய் மற்றும் இளநீரை குரங்குகள் மற்றும் அணில்களிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் சில மரங்களில் முள்வேலி அமைத்திருந்தோம்.

இருப்பினும் குரங்குகள் அதை லாவகமாக அகற்றிவிட்டு மேலே ஏறி சென்று தேங்காய்களை சேதப்படுத்தி விட்டு சென்று விடுகிறது. தற்போது பாம்பு ஓவியம் வரைந்துள்ளதால் அவை பயந்து இங்கு வருவதில்லை. இதனால் ஓரளவிற்கு குரங்குகள் அட்டகாசத்தில் இருந்து தேங்காய்களை பாதுகாத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்