சின்னாளப்பட்டியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 13 டன் ரேஷன் அரிசியுடன் 6 வாகனங்கள் பறிமுதல்

சின்னாளப்பட்டியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 13 டன் ரேஷன் அரிசி மற்றும் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-10 19:37 GMT

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே கலிக்கம்பட்டி கலைமகள் காலனி பகுதியில் சின்னாளப்பட்டி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள தனியார் குேடானில் லாரி, சரக்கு வேன் உள்பட 6 வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த குடோனுக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த 4 பேர் குடோனில் இருந்து அரிசி மூட்டைகளை வாகனங்களில் ஏற்றிக்கொண்டிருந்தனர். உடனே போலீசார் அந்த மூட்டைகளை சோதனை செய்தனர்.

அப்போது அந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 27), சிங்கராஜ் (36), மாரிமுத்து (42), மற்றும் ராஜா (46) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சின்னாளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் அரிசிகளை ஆம்னி வேன் மூலம் கொண்டுவந்து துரைராஜ் என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்து, பின்னர் குடோனில் சேகரித்து வைத்திருந்தனர். பின்னர் அவற்றை மொத்தமாக வாகனங்களில் கேரள மாநிலத்துக்கு கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட சதீஷ்குமார் உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் குடோனில் பதுக்கி வைத்திருந்த 13 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, ஆம்னி வேன், சரக்கு வேன் உள்பட 6 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், சின்னாளப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து கடத்தப்பட்ட அரிசி மூட்டைகளையும், பறிமுதல் செய்த வாகனங்களையும் பார்வையிட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்