'வேலையில்லா பட்டதாரி' படத்தில் புகை பிடிக்கும் காட்சி: நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு எதிரான வழக்கு ரத்து

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் எச்சரிக்கை வாசகம் இல்லாமல் புகை பிடிக்கும் காட்சி இடம் பெற்றதாக நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2023-07-10 19:13 GMT

சென்னை,

நடிகர் தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' என்ற திரைப்படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் தனுஷ் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றது. அதில், புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்கு குறித்து எச்சரிக்கை வாசகம் இடம்பெறவில்லை.

இதையடுத்து, இந்த படத்தை தயாரித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக பொதுசுகாதாரத்துறை சார்பில் சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிற்கு நேரில் ஆஜராகி இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

ஆஜராக விலக்கு

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இருவரும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இருவரும் நேரில் ஆஜராக விலக்கு அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, "மனுதாரர்களுக்கு எதிராக சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பரத் தடை மற்றும் வர்த்தகம் வினியோக கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த சட்டம் புகையிலை பொருட்களின் உற்பத்தியாளர்கள், வினியோகஸ்தர்களின் விளம்பரங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

வழக்கு ரத்து

இந்த படத்தில் சிகரெட்டை விளம்பரப்படுத்தவில்லை. ஏற்கனவே படம் தணிக்கை வாரியத்தால் தணிக்கை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு தணிக்கை மேற்கொள்ள முடியாது. புகார் தருவதற்கு முன்பு விளக்கம் தர எந்த ஒரு வாய்ப்பையும் மனுதாரர்களுக்கு அதிகாரிகள் வழங்கவில்லை" என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று பிறப்பித்தார். அதில், தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்