வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு

வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை அதிகரித்து கிலோ ரூ.100-க்கு விற்பனை ஆகிறது. இதேபோல் பல்லாரி விலையும் சற்று உயர்ந்து உள்ளது.

Update: 2023-10-12 21:23 GMT

சமையலில் உள்ளி எனப்படும் சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரி அத்தியாவசியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்திருந்ததால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதன் விலை கிலோ ரூ.100-க்கு மேல் உயர்ந்தது. இதேபோல் பல்லாரி விலையும் கணிசமாக உயர்ந்திருந்தது.

பின்னர் அவற்றின் விலை படிப்படியாக குறைந்தது. பல்லாரி கிலோ ரூ.20-க்கும், சின்ன வெங்காயம் ரூ.60-க்கும் குறைந்திருந்தது. ஆனால் அதன்பிறகு சின்ன வெங்காயம் விலை அதற்கு கீழ் குறையாமல் நீடித்து வந்தது.

கடந்த 1-ந்தேதி சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் விலை மெதுவாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் தரமான சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100 வரை சில்லரை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த தரம் உடைய சின்ன வெங்காயம் ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் பல்லாரி விலை சற்று உயர்ந்துள்ளது. கிலோ ரூ.40-க்கு விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் வரத்து குறைந்திருப்பதாலும், நவராத்திரி மற்றும் தீபாவளி வரை விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்