சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பாதிப்பு

மின் கட்டண உயர்வால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக முதல்-அமைச்சருக்கு தென்னைநார் உற்பத்தியாளர்கள் மனு அனுப்பினர்.

Update: 2023-09-14 21:45 GMT

பொள்ளாச்சி

மின் கட்டண உயர்வால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக முதல்-அமைச்சருக்கு தென்னைநார் உற்பத்தியாளர்கள் மனு அனுப்பினர்.

மின் கட்டண உயர்வு

பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை மற்றும் அதை சார்ந்த தொழில்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொருளாதார மந்தம் உள்ளிட்ட காரணங்களால் தென்னை நார் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மின் கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளதால் தொழிலை நடத்த முடியாத நிலைக்கு தென்னை நார் உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். மேலும் சில தொழிற்சாலைகள் வீட்டுமனைகளாகவும், திருமண மண்டபமாகவும் மாறி வருகின்றன. இந்த நிலையில் பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில் தென்னை நார் உற்பத்தியார்கள் சங்கத்தினர் நேற்று முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் ஒரு மனு அனுப்பினர். அந்த மனுவில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மேற்கூரை, சோலார் நெட்வொர்க் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன.

இதுகுறித்து கோவை மாவட்ட தென்னைநார் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

கோரிக்கை வைத்தும் தீர்வு இல்லை

தமிழக அரசு கடந்த ஒராண்டுக்கு முன் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்தினார்கள். அப்போது இந்த தொழில்கள் பாதிக்கப்பட்டன. இந்த உயர்வு மிக அதிகம் என்று அரசுக்கு எடுத்து கூறினார்கள். ஆனால் அதற்கு எந்தவொரு தீர்வும் கிடைக்காத சூழ்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையில் இந்த மின் கட்டண உயர்வு என்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மிகவும் பாதிக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள், அமைச்சர்களிடம் கூறியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தமிழகம் முழுவதும் கிட்டதட்ட 150 தொழில் அமைப்புகள் ஒன்று கூடி முதல்-அமைச்சருக்கு தனிப்பட்ட முறையில் தபால் அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்