சிவன்மலை மலைப்பாதையில் போக்குவரத்துக்கு அனுமதி
புதுப்பிக்கும் பணி முடிந்ததால் சிவன்மலை மலைப்பாதையில் போக்குவரத்துக்கு அனுமதி
காங்கயம்
சிவன்மலைக்கு செல்லும் பாதை புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவன்மலை முருகன் கோவில்
காங்கயம் அருகே சிவன்மலையில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மலைப்பாதை வழியாகவும், படிக்கட்டுகள் வழியாகவும் செல்ல பாதை அமைக்கப்பட்டிருந்தது. ஒருசில பக்தர்கள் மலையின் அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாக மலையின் உச்சிக்கு சென்று முருகனை தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் தாங்கள் வரும் வாகனங்களிேலயே கோவில் வரை சென்று சுவாமியை வணங்கினார்கள்.
ஆனால் வாகனங்கள் செல்லும் மலைப்பாதை ஆங்காங்கே பழுதடைந்து இருந்தது. இதனால் வாகனங்களில் செல்லும் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். இதையடுத்து . மலைக்கோவில் சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைய துறை சார்பில் சாலையை புதுப்பிக்க ரூ.2 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. இதன் காரணமாக கடந்த மே மாதம் 19- ந் தேதி முதல் மலைக்கோவில் சாலை அடைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் தங்களது வாகனங்களை மலை அடிவாரத்தில் நிறுத்தி விட்டு படிக்கட்டுகள் வழியாக கோவிலுக்கு சென்று வந்தனர்.
சாலை திறப்பு
இந்த நிலையில் சாலையை புதுப்பிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று முடிவுற்ற நிலையில் நேற்று புதுப்பிக்கப்பட்ட மலைக்கோவில் சாலை போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கோவில் உதவி ஆணையர் (பொறுப்பு) அன்னக்கொடி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதிகாலை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு ஆடிப்பெருக்கு நாளில் மலைக்கோவில் சாலை திறந்து விடப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.