மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து கணித பாடத்தை கவனித்த கலெக்டர்
மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து கணித பாடத்தை கலெக்டர் கவனித்தாா்;
தாளவாடி அருகே பள்ளிக்கூட வகுப்பறையில், மாணவ- மாணவிகளுடன் பெஞ்சில் அமர்ந்து கணித பாடத்தை மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கவனித்தார்.
ஆய்வு
தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று திடீரென சென்றார். பின்னர் அவர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், கோப்புகள் மற்றும் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்து கேட்டு அறிந்ததுடன், அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார்.
ரூ.11 கோடி
பின்னர் கும்டாபுரத்தில் ரூ.20 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை, ரூ.11 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலை அறிவியல் கல்லூரியின் கட்டிடம், வேளாண்மை துறை சார்பாக கட்டப்பட்டு வரும் காய்கறிகள் பதப்படுத்தும் கிடங்கு, ஓசூர் கிராமத்தில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை தொட்டி அமைக்கும் பணி உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து தாளவாடியில் உள்ள தாலுகா அலுவலகத்துக்கு சென்று ஆய்வு பணியில் கலெக்டர் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நடந்து சென்று டாக்டர்கள், நர்சுகள் வருகை குறித்து அங்குள்ள பதிவேட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கிருந்த நோயாளிகளிடமும் குறைகளையும் கேட்டு அறிந்தார். இதையடுத்து மல்குத்திபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் யானை புகுந்து விடாமல் இருக்க வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டு வரும் சூரிய மின் வேலியுடன் கூடிய அகழியையும் பார்வையிட்டார்.
மாணவ- மாணவிகளுடன் வகுப்பறையில்...
இதைத்தொடர்ந்து தலமலை கிராமத்தில் உள்ள அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளிக்கு சென்றார். அப்போது ஒரு வகுப்பறையில் கணித ஆசிரியர் ஒருவர் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்தார். உடனே அந்த வகுப்பறைக்குள் நுழைந்த கலெக்டர் மாணவ- மாணவிகள் உட்காரும் பெஞ்சில் அமர்ந்து ஆசிரியர் கணித பாடம் எடுத்ததை கவனித்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து வகுப்பறையை விட்டு வெளியே வந்த அவர், அங்கிருந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பள்ளிக்கூடத்துக்கு ஏதேனும் தேவை இருக்கிறதா? என கேட்டறிந்தார்.
ஆய்வின் போது தாசில்தார் ரவிசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் அர்த்தநாரீஸ்வரன், மனோகரன், ஒன்றிய பொறியாளர் ராமசாமி, உதவி பொறியாளர் பாண்டியன், நில வருவாய் ஆய்வாளர் மதிவாணன், வட்டார மருத்துவர் தமிழ்செல்வன் உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.