சிறுகடம்பூர் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் மழையால் ஒத்திவைப்பு

சிறுகடம்பூர் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் மழையால் ஒத்திவைக்கப்பட்டது.;

Update:2023-05-03 00:10 IST

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா அய்யனார் கோவில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் செல்லியம்மன் சிங்க வாகனத்திலும், மாரியம்மன் மயில் வாகனத்திலும் காலை, மாலையில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று படைத்தேர் திருவிழாவும், கொட்டும் மழையிலும் மாதிரி தேரோட்டமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று(புதன்கிழமை) பெருந்தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கிராம மக்களால் தேர் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தேரோடும் வீதிகள் சேறும், சகதியுமானது. இதையடுத்து தொடர் மழை காரணமாக, கிராம மக்கள் இன்று நடைபெற இருந்த தேரோட்டத்தை 2 நாட்கள் தள்ளி வைத்துள்ளனர். ஆனால் தொடர்ந்து காலை, மாலையில் அம்மன் வீதியுலா நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்