வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீண்டும் 'சிங்கம் சபாரி' - விரைவில் தொடங்கப்படுகிறது
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் மீண்டும் ‘சிங்கம் சபாரி’ விரைவில் தொடங்கப்பட உள்ளது.;
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 2021-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த நீலா, பத்மநாபன் ஆகிய சிங்கங்கள் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தது. இதன் தொடர்ச்சியாக உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் 3 சிங்கங்கள் உயிரிழந்தது.
இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் அருங்காட்சியகம், இரவு நேர விலங்குகள் இல்லம், உள்ளிட்ட 7 முக்கிய விலங்குகளின் இருப்பிடங்கள் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவற்றை பார்க்க பார்வையாளர்களுக்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டது.
இதில் மூடப்பட்டிருந்த சிறுவர் பூங்கா மற்றும் இரவு நேர விலங்குகள் இல்லம், பாம்புகள் இல்லம், உட்சென்று காணும் பறவைகள் கூடம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் அருங்காட்சியகம் ஆகியவை படிப்படியாக பார்வையாளர்கள் பார்ப்பதற்காக திறக்கப்பட்டது.
ஆனால் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் பேட்டரி வாகனம் மூலம் சென்று நேரடியாக சிங்கங்கள் உலாவுவதை பார்க்கும் 'சிங்கம் சபாரி'(லயன் சபாரி) திட்டம் மீண்டும் தொடங்கப்படாததால் தினந்தோறும் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
இந்த நிலையில் 'சிங்கம் சபாரி' திட்டத்தை மீண்டும் தொடங்கவேண்டும் என்று பார்வையாளர்கள் தொடர்ந்து பூங்கா நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் பூங்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரித்த பிறகு 'சிங்கம் சபாரி' திட்டத்தை தொடங்குவதற்கு பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் லக்னோ மற்றும் கர்நாடகாவில் உள்ள பூங்காவில் இருந்து 2 சிங்கங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குக் கொண்டுவரப்பட்டன. இதனால் இந்த பூங்காவில் சிங்கங்களின் எண்ணிக்கை தற்போது 10-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட 'சிங்கம் சபாரி' திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கு பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக மூடப்பட்ட 'சிங்கம் சபாரி' பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புக்கம்பி வேலிகள் நல்ல உறுதித்தன்மையோடு இருப்பதற்காக பல்வேறு சீரமைப்புப்பணிகள் நடைபெற்று உள்ளது. அதன் இருப்பிடங்களில் சில சிங்கங்கள் விடப்பட்டு, பேட்டரி வாகனத்தில் சென்று நேரடியாக அவற்றை பார்ப்பது போல் சோதனை ஓட்டங்கள் நடைபெற உள்ளது.
சிங்க உலாவிடங்களுக்கு நேரடியாக பொதுமக்கள் சென்று பார்ப்பதற்காக புதிய பேட்டரி வாகனங்கள் வாங்குவதற்கு பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் பார்க்க 'சிங்கம் சபாரி' திட்டம் மிக விரைவில் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.