காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வெள்ளி தேர் திருவிழா
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வெள்ளி தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வெள்ளி தேர் திருவிழா
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாதம் பிரம்மோற்சவத்தினையொட்டி வெள்ளித் தேர் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. சக்தி பீட தலங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாதம் பிரம்மோற்சவம் கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல், நாள்தோறும் காலை மாலை என இரு வேளைகளில் காமாட்சி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள்...
பிரம்மோற்சவத்தின் முக்கிய உற்சவமான 9-ம் நாள் இரவு வெள்ளி தேர் உற்சவத்தில் பச்சை, சிகப்பு நிறபட்டு உடுத்தி, திருவாபரணங்கள் அணிந்து, மனோரஞ்சிதப்பூ, செண்பகப் பூ, மல்லிகைப்பூ மலர் மாலைகள், சூடி, காஞ்சீ காமாட்சியம்மன் வெள்ளிக் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வெள்ளி தேரில் பவனி வந்த காமாட்சியம்மனை காண உள்ளூர் மற்றும் வெளியூரென ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆங்காங்கே காத்திருந்து சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர். வெள்ளித்தேர் காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவில் முன்பு வந்த போது, விண்ணை பிளக்கும் வகையில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கண்கவர் வண்ண வண்ண வான வேடிக்கைகளை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கை குழந்தைகளுடன் கண்டு ரசித்து சென்றனர்.