டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்

தேனி அல்லிநகரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-23 15:57 GMT

தேனி அல்லிநகரத்தில் ரேஷன் கடைகள், கூட்டுறவு சங்கம் அமைந்துள்ள பகுதியில் பெரியகுளம் சாலையோரம் கடந்த வாரம் அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள்  அந்த டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடை முன்பு தரையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகன், வெண்மணி, தாலுகா செயலாளர் தர்மர், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம், நகர செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர். போராட்டம் நடத்தியவர்களிடம் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் காரணமாக அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்