கம்பம் அருகே சூறைக்காற்றுடன் மழை:மக்காச்சோள பயிர்கள் அடியோடு சாய்ந்தன
கம்பம் அருேக சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மக்காச்ேசாள பயிர்கள் அடியோடு சாய்ந்தன.
கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் முல்லைப்பெரியாறு அணை மூலம் பாசனம் நடைபெறுகிறது. இங்கு வாழை, திராட்சை மற்றும் பீட்ரூட், நூக்கல், முள்ளங்கி, புடலங்காய், வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதேபோல் நாராயணத்தேவன்பட்டி பகுதியில் மக்காச்சோள பயிர் சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்கள் தற்போது நன்கு வளர்ந்து கதிர்கள் விட்டிருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் கம்பம் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்கள் அடியோடு சாய்ந்தன. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கால்நடை தீவனமாகவும், மைதா, உணவு பொருட்கள் தயாரிப்பதற்கும் பயன்படுவதால் மக்காச்சோளத்துக்கு கடும் கிராக்கி உள்ளது. மேலும் குறுகிய கால பயிர் என்பதால் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் ஆர்வம் காட்டினர். தற்போது அறுவடைக்கு ஒரு மாத காலம் உள்ள நிலையில் பலத்த காற்று வீசியதால் பயிர்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.