ஆசிரியர்களுக்கு குறுவள பயிற்சி

ஆசிரியர்களுக்கு குறுவள பயிற்சி நடைபெற்றது.

Update: 2023-07-14 20:44 GMT


மாவட்ட அளவிலான பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு ஆசிரியர்களுக்கான குறுவள பயிற்சி விருதுநகர் நோபிள்கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமை தாங்கினார். பாளையம்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் வெள்ளத்துரை முன்னிலை வகித்தார். பயிற்சியினை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் ராமன் பேசுகையில், ஆண்டின் முதல் பயிற்சியாக உடல் நலமும் நல்வாழ்வும் மற்றும் மனநலமும் நல்வாழ்வும் என்ற தலைப்பில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் வருகிற ஆகஸ்ட் 4-ந் தேதி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஒன்றிய கருத்தாளர்கள் கவனமான பயிற்சியை எடுத்துக் கொண்டு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநல மேம்பாட்டிற்கு சரியான வழிகாட்டலை கையாள வேண்டும் என்றார். பயிற்சி நிறுவன முதல்வர் வெள்ளத்துரை பேசுகையில், இனி வருங்காலத்தில் குறுவள பயிற்சி 1-ம்வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நடைபெறும். தொடர்ச்சியான பணிமனை பயிற்சியின் மூலம் ஆசிரியர்கள் தங்களது பணித்திறனை மேம்படுத்திக் கொண்டு வகுப்பறையில் கடினமான பாடப் பகுதிகளைக்கூட மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் கற்றல் கற்பித்தல் நிகழ்ந்த முடியும் என்றார்.

இதில் 128 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியின் போது கருத்துரையாளர்களாக பாளையம்பட்டி ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் தனலட்சுமி, விரிவுரையாளர்கள் பரமேஸ்வரன், வசந்தி, சரவணக் குமாரி, ராணி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். முடிவில் முதுநிலை விரிவுரையாளர் வெங்கடசாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்