29 குழந்தைகளை கொத்தடிமைகளாக வைத்திருந்த கடை உரிமையாளர் கைது

சென்னை மண்ணடி பகுதியில் 29 குழந்தைகளை கொத்தடிமைகளாக வைத்திருந்த கடை உரிமையாளர் கைது.

Update: 2023-05-24 20:56 GMT

சென்னை,

தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அ.ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரின் அறிவுரைப்படி, கடந்த மாதம் 20-ந் தேதி மண்ணடி பகுதியில் சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி, தொழிலாளர் இணை ஆணையர்-1 விமலநாதன், தொழிலாளர் உதவி ஆணையர் அ.ஜெயலட்சுமி மற்றும் மாவட்ட தடுப்புக்குழு உறுப்பினர்கள் இணைந்து கூட்டாய்வு மேற்கொண்டனர்.

அப்போது மண்ணடி மலையப்ப தெருவில், ஆலியா பேக் என்ற நிறுவனத்தில் 29 தொழிலாளர்கள் பை தைக்க பயன்படுத்தப்படும் ரெக்சின் சுருள்களின் நடுவிலும், பை கழிவுகளுக்குள்ளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அதில் 7 வயது முதல் 14 வயதுடைய 27 சிறுவர்களுக்கும் மற்றும் 2 வளரிளம் பருவ தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச கூலி வழங்காமலும், வெளியே செல்ல அனுமதிக்காமலும் கழிவறையுடன் கூடிய ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.இதையடுத்து ஆலியா பேக் உரிமையாளர் முகமது சாகித் (வயது 35) மீது முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குழந்தைகளின் வாக்குமூலத்தின் பேரில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டு வந்த அப்துல் மஜித் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். மேற்படி, வழக்கில் தலைமறைவாக இருந்த கடை உரிமையாளர் முகமது சாகித் நேற்று முன்தினம் ஏழுகிணறு பகுதியில் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்