திருவாரூர் மாவட்டத்தில் கடையடைப்பு-மறியல் போராட்டம்
கர்நாடக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் கடையடைப்பு-மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 54 பெண்கள் உள்பட 805 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கர்நாடக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் கடையடைப்பு-மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 54 பெண்கள் உள்பட 805 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடையடைப்பு-மறியல்
சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் உரிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் உழவர் பெருமக்கள்மீது அக்கறையில்லாமல் அலட்சியம் காட்டும் மத்திய அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் முடிவு செய்தது.
அதன்படி திருவாரூர் நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதி, நகைக்கடை சந்து போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தொடர்ந்து திருவாரூரில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் நகராட்சி அலுவலகம் அருகில் திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தெற்குவீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம் வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர்.
ஒப்பாரி வைத்து போராட்டம்
அங்கு கர்நாடக அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் ரெயில்வே மேம்பாலத்தை அடைந்தனர். அங்கு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு கூட்டியக்கத்தின் தலைவர் மாசிலாமணி தலைமை தாங்கினார்.
இதில் தி.மு.க. நகர செயலாளர் வாரை பிரகாஷ், ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா, பொதுக்குழு உறுப்பினர்கள் தியாகபாரி, செந்தில், விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சாமி நடராஜன், மாவட்ட செயலாளர் சேகர், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் அருள், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன், மக்கள் அதிகாரம் மண்டல அமைப்பாளர் சண்முகசுந்தரம், விவசாயிகள் சங்க நிர்வாகி வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் விவசாயி ஒருவரை படுக்க வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலத்தில் நேற்று கடையடைப்பு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. மறியல் போராட்டத்திற்கு தி.மு.க. சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ராசமாணிக்கம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஆனந்த், கவியரசு, நகர தி.மு.க. செயலாளர் ராஜசேகரன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பால சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நீடாமங்கலம் பெரியார் சிலை பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த மறியல் போராட்டத்தால் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொரடாச்சேரி
கொரடாச்சேரியில் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடந்தது. தொடர்ந்து கொரடாச்சேரி வெட்டாறு பாலத்தில் இருந்து ஊர்வலமாக வந்து தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
குடவாசல்
குடவாசல் தபால் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு குடவாசல் (தெற்கு) ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி, நெடும்பலம், கட்டிமேடு, மணலி, ஆலத்தம்பாடி, கச்சனம், விளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 2500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து புதிய பஸ் நிலையம் அருகே சாலைமறியல் நடந்தது. தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, உலகநாதன் உள்ளிட்ட அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும், விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் ஊர்வலமாக சென்று தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நன்னிலம்
நன்னிலத்தில் இந்தியா கூட்டணி சார்பில் முழு கடை அடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து பஸ் நிலையத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் நன்னிலம் தபால் நிலையத்தை சென்றடைந்தது. பின்னர் தபால் நிலையம் முன்பு கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அதேபோல் சன்னா நல்லூர், பேரளம், கொல்லுமாங்குடி, ஆண்டிப்பந்தல், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டையில் காவேரி படுகை பாதுக்காப்பு கூட்டியக்கம் சார்பில் தலைமை தபால் நிலையம் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. முன்னதாக தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன், மாவட்ட துணைச்செயலாளர் எம்.எஸ்.கார்த்திக் ஆகியோர் தலைமையிலும், கம்யூனிஸ்டு மாவட்ட துணைச்செயலாளர் முருகையன், ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் வெற்றி, காங்கிரஸ் வட்டார தலைவர்கள் வடுகநாதன், ரெங்கசாமி, இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் பாட்சா, முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் முகைதீன் அடுமை, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் மன்னார்குடி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று பழைய பஸ் நிலையத்தில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி
மன்னார்குடியில் முழு அடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மன்னார்குடி தேரடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ், மன்னார்குடி நகர சபை தலைவர் மன்னை.சோழராஜன், தி.மு.க. நகர செயலாளர் வீரா.கணேசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூரில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தி.மு.க.நகர செயலாளர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். முன்னதாக கூத்தாநல்லூர் பாய்க்கார தெருவில் இருந்து ஊர்வலமாக சென்று கூத்தாநல்லூர் தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். மேலும் கூத்தாநல்லூர் மற்றும் லெட்சுமாங்குடி, வடபாதிமங்கலம் பகுதிகளில் வர்த்தகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
805 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், கூத்தாநல்லூர், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. குறிப்பாக மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் லாரிகள் இயங்கவில்லை. அதே போன்று ஆட்டோக்களும் ஓடவில்லை.
மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம், கொரடாச்சேரி, கூத்தாநல்லூர் ஆகிய 5 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 54 பெண்கள் உள்பட மொத்தம் 805 பேரை போலீசார் கைது செய்தனர்.
அனைத்து தரப்பினரும் ஆதரவு
காவிரி நீர் டெல்டா வாழ்வாதார பிரச்சினை என்பதாலும், விவசாயமே பிரதான தொழில் என்பதாலும் முழு அடைப்பு போராட்டத்திற்கு வணிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்தனர்.
வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் நடத்துகின்ற காவிரி நீர் பிரச்சினைக்கு ஆதரவாக திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் சுர்ஜித் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்த், துணை தலைவர்கள் சந்தோஷ், லிவிஸ்டியா, துணை செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட குழு உறுப்பினர் வைகை மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பரத்செல்வன் முன்னிலை வகித்தார். இதில் கல்லூரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கர்நாடக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.