சீலா மீன் விலை உயர்வு

விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை: சீலா மீன் விலை உயர்வு

Update: 2023-04-26 18:37 GMT

பனைக்குளம்,

தமிழகம் முழுவதும் தற்போது விசைப்படகுகளுக்கு 61 நாள் மீன்பிடி தடை கால சீசன் அமலில் உள்ளது.

கடந்த 15-ந் தேதியில் இருந்து விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 2000-க்கும் அதிகமான விசைப்படகுகள் ஏப்ரல் 15-ந் தேதி முதல் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

நாட்டுப்படகுகள் மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் பிடித்து வரக்கூடிய அனைத்து வகை மீன்களும் சற்று விலை உயர்ந்து விற்பனையாகிறது.

மண்டபம் பகுதியில் நாட்டுப்படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலையில் சுமார் 30 கிலோ எடை கொண்ட பெரிய சீலா மீன் சிக்கியது. இந்த சீலா மீனை மீனவர்களிடமிருந்து உச்சிப்புளி அருகே உள்ள புது மடத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் விலைக்கு வாங்கி சென்றார்.

இதுகுறித்து மண்டபம் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கூறும்போது, விசைப்படகுகள் மீன் பிடிக்க சென்று வந்த வரையிலும் சீலா மீன்கள் ஒரு கிலோ ரூ. 600 வரை விலை போனது. தற்போது சீலா மீன் சீசனும் முடிந்துவிட்டதோடு சீலா மீன்கள் வரத்தும் மிகவும் குறைந்துவிட்டது. விசைப்படகுகளும் மீன் பிடிக்க செல்லாததால் நாட்டுப்படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்று வருகின்றன. இதனால் சீலா மீன்களின் விலை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ சீலா மீனின் விலை ரூ.900 ஆக உள்ளது. இன்னும் விலை உயர வாய்ப்பு உள்ளது. பாறை, முரள் உள்ளிட்ட மற்ற வகை மீன்களும் சற்று விலை உயர தொடங்கியுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்