பேசின் பிரிட்ஜ் பணிமனை அருகே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது

பேசின் பிரிட்ஜ் பணிமனை அருகே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. பயணிகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Update: 2023-06-09 21:22 GMT

சென்னை,

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தது.

பின்னர் இந்த ரெயில் பயணிகளை இறக்கிவிட்டு 12 மணி அளவில் சென்டிரலில் இருந்து பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்றுகொண்டிருந்தது.

அப்போது, பணிமனை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக ரெயில் தடம் புரண்டது. ரெயிலின் ஒரு பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டாவளத்தை விட்டு விலகி கீழே இறங்கின.

மாற்று பாதையில் இயக்கம்

இதையடுத்து, டிரைவர் ரெயிலை உடனடியாக நிறுத்தினார். சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்துக்கு ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து 2 சக்கரங்களையும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு 2 சக்கரங்களும் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டன. இதனால், பணிமனைக்கு செல்லும் ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டது.

அசம்பாவிதம் தவிர்ப்பு

சென்டிரலில் இருந்து பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு ரெயில் குறைவான வேகத்திலேயே இயக்கப்பட்ட போதிலும் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மேலும், பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் பரபரப்பு

அண்மையில், ஒடிசா ரெயில் விபத்து நாட்டையே உலுக்கிய நிலையில், ரெயில் நிலையங்கள், தண்டவாளங்கள், சிக்னல் உள்ளிட்டவைகளை சரிவர ஆய்வு செய்ய வேண்டும் எனவும், வரும் 14-ந் தேதிக்குள் இதுகுறித்த அறிக்கையை மண்டல மேலாளர்கள் ரெயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில் பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்ற ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவில் தடம் புரண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்