தொழிலில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு: 3 பேரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்தவர் கைது
தொழிலில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறி 3 பேரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
பெரும்பாக்கம்,
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் காந்தி நகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மதன் (வயது 40). இவரிடம், அதே குடியிருப்பில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரான காசிவிஸ்வநாதன் (45) என்பவர், தான் புதிதாக தொடங்க உள்ள தொழிலில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார்.
அதனை நம்பிய மதன், தனது நண்பர்களான சக்தி, சாய்கணேஷ் ஆகியோருடன் சேர்ந்து ரூ.15 லட்சத்தை காசி விஸ்வநாதனிடம் தொழிலில் முதலீடு செய்ய கொடுத்தனர்.
ரூ.15 லட்சம் மோசடி
ஆனால் ரூ.15 லட்சத்தை பெற்றுக்கொண்டு பல மாதங்கள் ஆகியும் காசிவிஸ்வநாதன் தான் சொன்னடி லாபத்தில் பங்குதாராமல் ஏமாற்றி வந்தார். இதனால் மதன், தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டார். அதற்கு காசிவிஸ்வநாதன், கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது.
இதையடுத்து மதன் மற்றும் அவருடைய நண்பர்கள் இந்த மோசடி குறித்து பெரும்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசி விஸ்வநாதனிடம் விசாரித்தனர். அப்போது காசி விஸ்வநாதன், 3 பேரிடம் இருந்து வாங்கிய ரூ.15 லட்சத்தை கொண்டு மாத தவணையில் ஒரு வீடு மற்றும் கார் வாங்கி சொகுசாக வாழ்ந்து வருவது தெரியவந்தது. அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த பெரும்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார், காசி விஸ்வநாதனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.