சங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: தென்காசி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.;
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணியிலிருந்து 9:45 மணிக்குள் நடைபெறுகிறது. இதற்காக கோயில் உள் பிரகாரத்தில் 66 குண்டங்கள் கொண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பூர்வாங்க பூஜைகள் கடந்த 16-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் காலை வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடைபெற்றது. மேலும் ஆச்சார்ய விஷேச சந்தி, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம் ஆகியவற்றுடன் 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் மூல மூர்த்திகள் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும், மாலையில் 3, 4-ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.
நேற்று காலை பரிவார யாகசாலையில் மகாபூர்ணாஹூதி, தீபாராதனை முடிந்ததும் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து பிரதான யாகசாலையில் மஹாபூர்ணாஹூதி, உபச்சாரங்கள் நடைபெற்றது.
சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. அதிகாலை முதலே பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. காலை 8 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், 9 மணிக்கு கோமதி அம்பிகா சமேத சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயணசாமி விமானம் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகமும், 9.45 மணிக்கு கோமதி அம்பிகா சமேத சங்கரலிங்க சுவாமி மற்றும் சங்கரநாராயணசாமி மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனையும் நடைபெற உள்ளது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது என்பதால் தென்காசி மாவட்டத்துக்கு அரசு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.