ஜாம்புவானோடை விஸ்வநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
ஜாம்புவானோடை விஸ்வநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.;
முத்துப்பேட்டை தாலுகா தில்லைவிளாகத்தை அடுத்துள்ள ஜாம்புவானோடை வடகாட்டில் விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனிபிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திபகவானுக்கு தேன், பால், தயிர், பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குடவாசல் பகுதியில் உள்ள சிவாலயங்களில் நேற்று சனிபிரதோஷ வழிபாடு நடந்தது. கூந்தலூர் ஜம்புகாரண்யேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அருகம்புல் மாலை மற்றும் புஷ்ப அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு நந்தி பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். திருவீழிமிழலை வீழிநாதசாமி கோவில், சீதக்கமங்கலம் மூலநாதர் கோவில், திருப்பாம்புரம் ஷேசபுரீஸ்வரர் கோவில், குடவாசல் கோணேஸ்வரர் கோவில், சத்ருசம்ஹார மூர்த்தி கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.