அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; உடற்கல்வி ஆசிரியர் கைது

கோவை அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-29 20:45 GMT

கோவை,

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பிரபாகரன் (வயது 56). இவர் கடந்த வாரம்தான் வால்பாறையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர், அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை தொட்டு பேசுவது, அழகாக இருக்கிறாய் என்று ஜாடையாக பேசுவது போன்ற சில்மிஷ செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மாணவிகள் கழிவறைக்கு சென்றால் கழிவறையின் கதவை மூடுவது மற்றும் மாணவிகளின் செல்போன் எண்ணை கொடுக்குமாறு கேட்பது உள்ளிட்ட பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக தெரிகிறது.

பெற்றோர் முற்றுகை

இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறி உள்ளனர். இதைகேட்டு மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் நேற்று பாதிக்கப்பட்ட சில மாணவிகளின் பெற்றோர் பள்ளி முன்பு திரண்டனர்.

அப்போது அவர்கள் உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். மேலும் மாணவிகளின் பெற்றோரும், பொதுமக்களும் அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்கிடையில் முற்றுகை போராட்டம் நடப்பதை அறிந்த பிரபாகரன் நேற்று பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே இருந்துகொண்டார். இந்த பிரச்சினை கலெக்டர் சமீரன் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து கோவை அனைத்து மகளிர் மேற்கு பகுதி போலீசார் பிரபாகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்