பாலியல் புகார்: பாரிமுனை காளிகாம்பாள் கோவில் பூசாரி கைது
பாலியல் புகாரையடுத்து பூசாரி கார்த்திக் முனுசாமியை கோவில் நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது.;
சென்னை,
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி பெண் ஊழியர் ஒருவர் பாரிமுனையில் உள்ள உள்ள கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.
அதில், பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் பூசாரியாக உள்ள கார்த்திக் முனுசாமி எனக்கு நட்பானார். அவர் ஒருநாள் கோவில் தீர்த்தம் என்று கூறி ஒரு திரவத்தை குடிக்க கொடுத்தார். அதனை குடித்த பிறகு நான் மயங்கி விட்டேன். அப்போது பூசாரி கார்த்திக் முனுசாமி என்னை கற்பழித்துவிட்டார். இதன் பின்னர் என்னை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார். என்னுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையிலும் முக்கிய பிரமுகர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவருடன் நெருக்கமாக இருக்க சொன்னார் என்று தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக விருகம்பாக்கம் மகளிர் போலீசார் பூசாரி கார்த்திக் முனுசாமி மீது பாலியல் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து பூசாரி கார்த்திக் முனுசாமியை கோவில் நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர். மேலும் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த பூசாரி கார்த்திக் முனுசாமியை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். பூசாரியை சென்னைக்கு அழைத்துவரும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதற்கு பிறகுதான் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.