மக்கள் நீதிமன்றத்தில் 3,308 வழக்குகளுக்கு தீர்வு

வேலூர் மாவட்டத்தில் 11 கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 3,308 வழக்குகளில் ரூ.31 கோடியே 4 லட்சத்து 51 ஆயிரத்து 664 இழப்பீடு தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2023-02-11 16:49 GMT

மக்கள் நீதிமன்றம்

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான வசந்தலீலா தலைமை தாங்கி பேசுகையில், லோக்அதாலத் இதற்கு முன்பு வாரந்தோறும் நடைபெற்றது. தற்போது ஆண்டிற்கு 4 முறை மட்டுமே நடக்கிறது. தற்போது இங்கு பொதுமக்கள் கடந்த முறையை விட குறைவாக வந்துள்ளனர். இது அதிகரிக்க வேண்டும். விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை என்பதற்கு உதாரணம் தான் இந்த மக்கள் நீதிமன்றம். எனவே மக்கள் நீதிமன்றத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

இதில், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்து என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு வேலூர் பழைய பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது லாரி மோதி அவருடைய வலதுகை உடைந்தது. இதுகுறித்து வேலூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு மக்கள் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. இதையடுத்து முத்துவிடம் ரூ.22 லட்சத்துக்கான காசோலையை முதன்மை அமர்வு நீதிபதி வசந்தலீலா வழங்கினார்.

ரூ.31 கோடியே 4 லட்சம் இழப்பீடு

அதைத்தொடர்ந்து நடந்த மக்கள் நீதிமன்றத்தில் வாகன விபத்து, வங்கி வராக்கடன், நிலமோசடி, தொழிலாளர் வழக்கு, குடும்பநல வழக்கு, காசோலை மோசடி உள்பட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 11 கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 8,824 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

அவற்றில் 3,308 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. அதன்மூலம் ரூ.31 கோடியே 1 லட்சத்து 51 ஆயிரத்து 664-ஐ இழப்பீடாக சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.

மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதிகள், வக்கீல்கள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வருவாய்துறை அலுவலர்கள், வங்கி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாகம் செய்திருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்