திண்டிவனத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 28 வழக்குகளுக்கு தீர்வு
திண்டிவனத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 28 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
திண்டிவனம்,
திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் மக்கள் நீதிமன்றம்(லோக் அதாலத்) நடைபெற்றது.
இலவச சட்ட உதவி ஆணைகுழு தலைவியும், முதன்மை சார்பு நீதிபதியுமான தனம் வரவேற்றார். 1-வது மாவட்ட கூடுதல் நீதிபதி ரஹ்மான், 2-வது மாவட்ட கூடுதல் நீதிபதி மகாலட்சுமி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி நர்மதா, 1-வது குற்றவியல் நடுவர் கமலா, 2-வது குற்றவியல் நடுவர் மாலதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறுகுற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்கு போன்றவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில் முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மோட்டார் வாகன விபத்தில் இறந்த வழக்கு சம்பந்தமாக 2-வது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது.
இதுதொடர்பாக தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் இறந்த எம்.பி. ராஜேந்திரனின் வாரிசுகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் சுமுக முடிவு எடுக்கப்பட்டு, ரூ.55 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
இதேபோல் மொத்தம் 28 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ஒரு கோடியே 86 லட்சத்து 83 ஆயிரத்து 875 ரூபாய் வழங்கப்பட்டது.
இதில் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் கோதண்டம், பார் அசோசியேஷன் தலைவர் சண்முகம், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சேகர், வழக்கறிஞர் நல சங்க செயலாளர் கிருபாகரன், மகளிர் சங்கம் துளசி ஆகியோர் கலந்து கொண்டு பேசினா். முடிவில் மோட்டார் வாகன தீர்ப்பாய நீதிபதி தனலட்சுமி நன்றி கூறினார்.