மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 2 ஆயிரத்து 759 வழக்குகளுக்கு தீர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 2 ஆயிரத்து 759 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2022-11-12 17:22 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 2 ஆயிரத்து 759 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

தமிழகத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காணும் வகையில் மக்கள் நீதிமன்றங்களை நடத்தும்படி மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு, பழனி, வேடசந்தூர் உள்ளிட்ட கோர்ட்டுகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 அமர்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதையொட்டி காசோலை மோசடி, வங்கி வராக்கடன், மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு கோரும் வழக்குகள், குடும்ப நல வழக்குகள் உள்பட 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அதேபோல் ஒவ்வொரு வழக்கிலும் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன

திண்டுக்கல், பழனி

இதில் திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதி சிவகடாச்சம் தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட நீதிபதிகள் சரவணன், சரண், நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் விஜயகுமார், வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிபதி ஜான்மினோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாரதிராஜா வரவேற்றார்.

இதில் விபத்தில் பாதிக்கப்பட்டு இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்குகளில் தீர்வு காணப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இழப்பீடு தொகைக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

பழனி கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்துக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி கருணாநிதி தலைமை தாங்கினார். முதன்மை சப்-கோர்ட்டு நீதிபதி ஹரிகரன், கூடுதல் சப்-கோர்ட்டு நீதிபதி ஜெயசுதாகர், உரிமையியல் நீதிபதி ஞானசம்பந்தம், ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மொத்தம் 581 வழக்குகளுக்கு முடிவு காணப்பட்டு, ரூ.3 கோடியே 59 லட்சத்து 5 ஆயிரத்து 517 தீர்வு தொகையாக வழங்கப்பட்டது.

வேடசந்தூர்

வேடசந்தூர் கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்துக்கு, நீதிபதி சரவணகுமார் தலைமை தாங்கினார். ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சசிகலா முன்னிலை வகித்தார். இதில், 25 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.43 லட்சம் தீர்வு தொகையாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வேடசந்தூர் வக்கீல்கள் சங்க தலைவர் பொன்.முருகேசன், செயலாளர் தங்கவேல் முனியப்பன், வக்கீல்கள் நாகராஜ், நல்லுசாமி மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 759 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. அதன்மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ரூ.11 கோடியே 66 லட்சத்து 7 ஆயிரத்து 553 தீர்வு தொகையாக வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்