மினிலாரியில் ரகசிய அறை அமைத்து ரூ.30 லட்சம் கஞ்சா கடத்தல்; டிரைவர் கைது

விக்கிரமசிங்கபுரத்தில் மினிலாரியில் ரகசிய அறை அமைத்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள கஞ்சா கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-15 19:53 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தில் மினிலாரியில் ரகசிய அறை அமைத்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள கஞ்சா கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்திற்கு ஒரு வாகனத்தில் சிலர் கஞ்சா கடத்தி விற்பனைக்கு கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மதியம் விக்கிரமசிங்கபுரம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கோட்டைவிளைப்பட்டி விலக்கு பகுதியில் வந்த மினி லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எந்த பொருளும் இல்லாமல் இருந்தது. இதையடுத்து மினி லாரி டிரைவரிடம் வாகனம் எங்கிருந்து வருகிறது என்று போலீசார் கேட்டனர். ஆனால் அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார்.

ரகசிய அறையில் கஞ்சா

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மினி லாரியை மீண்டும் சோதனை செய்தனர். அப்போது, மினி லாரியின் மாற்று சக்கரம் (ஸ்டெப்னி) இருக்கும் பகுதி, டூல்ஸ் பாக்ஸ் மற்றும் பேட்டரி இருக்கும் பகுதியில் ரகசிய அறை இருந்தது. அதில் ஏராளமான பார்சல்கள் இருந்தன. அதை சோதனை செய்த போது, அவை அனைத்தும் கஞ்சா என்பதும், மொத்தம் 100 கிலோ இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் மினி லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ராமானுஜம்புதூரைச் சேர்ந்த வானுமாமலை மகன் தளவாய் மாடன் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி விற்பனைக்கு கொண்டு வந்ததும், இந்த சம்பவத்தில் ேமலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

ரூ.30 லட்சம்

இதுகுறித்து அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் கூறுகையில், 'கைது செய்யப்பட்ட தளவாய்மாடனிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள 100 கிலோ கஞ்சாவையும், மினிலாரியையும் பறிமுதல் செய்துள்ளோம். இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கற்பகவிநாயகம், முருகேஷ் மற்றும் போலீசார் கார்த்திக் பாபு, இசக்கிராஜா, திவான்ஷா, முகம்மதுபஷீர், ராஜேஷ் ஆகியோரை பாராட்டுகிறேன்' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்