தொடர் மழையால் இடிந்து விழுந்த தொகுப்பு வீடு

வேடசந்தூர் அருகே தொடர்மழையால் தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது. கூலித்தொழிலாளி குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2022-06-16 13:14 GMT

வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் ஊராட்சி மேல்மாத்தினிபட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 33). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி மாரியம்மாள் (30). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில், ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அந்த வீடு மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக, மாலை நேரத்தில் வேடசந்தூர் பகுதியில் தொடர்மழை பெய்தது. இதனால் ராதாகிருஷ்ணன், தனது குடும்பத்தினருடன் அருகே உள்ள உறவினர் வீட்டில் நேற்று முன்தினம் தூங்கினார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் ராதாகிருஷ்ணன் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டு எழுந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டின் உள்ளே இருந்த கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் இடிபாடுகளில் சிக்கி நொறுங்கியது. உறவினர் வீட்டில் தூங்கியதால் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வீடு இடிந்த சம்பவம் குறித்து அறிந்த வேடசந்தூர் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே பழுதடைந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாகவும், அந்த வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்