காட்டுப்பன்றிக்கு அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி பலி

புளியங்குடி அருகே காட்டுப்பன்றிக்கு அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி பலியானார்.

Update: 2023-01-18 18:45 GMT

புளியங்குடி:

புளியங்குடி அருகே தனது தோட்டத்தில் காட்டுப்பன்றிக்கு அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி பலியானார்.

இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

விவசாயி

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள புன்னையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பலவேசம் மகன் அனைஞ்சி (வயது 50). விவசாயியான இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

அனைஞ்சிக்கு சொந்தமான தோட்டம் புளியங்குடி அருகே கோட்டமலை பகுதியில் உள்ளது. அங்கு அவர் தற்போது நெற்பயிரிட்டுள்ளார். மேலும், அந்த பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அருகே இருப்பதால் காட்டு பன்றிகளிடம் இருந்து நெற்பயிரை பாதுகாப்பதற்காக வயலை சுற்றி மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

மின்வேலியில் சிக்கி சாவு

நேற்று முன்தினம் இரவில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக அனைஞ்சி சென்றார். அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக மின்வேலியை மிதித்தார். இதில் தூக்கி வீசப்பட்ட அனைஞ்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நேற்று காலையில் அந்த வழியாக சென்ற விவசாயிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அனைஞ்சி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தனது தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்