கச்சிராயப்பாளையத்தில் அரசு பள்ளி கட்டிடத்துக்கு தீ வைப்பு மதுபிரியர்கள் அட்டகாசம்

கச்சிராயப்பாளையத்தில் அரசு பள்ளி கட்டிடத்துக்கு தீ வைத்த மதுபிரியர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-07-11 16:03 GMT


கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்கூடத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் பயன்படுத்தாத பெஞ்சுகள், நாற்காலிகள் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த கட்டிடத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள், கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் மற்றும் கச்சிராயப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அங்கிருந்த பெஞ்சுகள், நாற்காலிகள் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமானது.

மதுபிரியர்கள் அட்டகாசம்

இதனிடையே போலீசார் விரைந்து வந்து தீ விபத்து நிகழ்ந்த கட்டிடத்தை பார்வையிட்டனர். பின்னர் இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், இந்த பள்ளி வளாகத்தில் 5 பழைய கட்டிடங்கள் செயல்படாமல் இருக்கிறது. இந்த அறைகளின் ஜன்னல் மற்றும் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். பள்ளிக்கூடத்திற்கு காவலாளி கிடையாது.

இதை பயன்படுத்தி சிலர் பள்ளியின் பழைய கட்டிட பகுதியில் அமர்ந்து மதுகுடிப்பது, சூதாடுவது உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவும் மதுபிரியர்கள் மதுகுடித்துவிட்டு, பழைய கட்டிடத்தில் இருந்த பெஞ்சுகள், நாற்காலிகளுக்கு தீ வைத்து எரித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி கட்டிடத்திற்கு தீ வைத்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி, வருவதோடு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்