சேவை குறைபாடு: வங்கிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

சேவை குறைபாடால் வங்கிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-11-08 18:54 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே உள்ள முகிலன்விளையை சேர்ந்தவர் ராயப்பன். இவர் நாகர்கோவிலில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு‌ கணக்கு வைத்துள்ளார். இவர் மற்றொரு நிறுவனத்தில் வாங்கியிருந்த கடனுக்காக இந்த வங்கியில் இருந்து காசோலை கொடுத்துள்ளார். சில நாட்களில் கடன் பெற்றிருந்த நிறுவனத்தில் இருந்து வங்கி கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பி வந்துள்ளது. ஆனால் ராயப்பனின் வங்கி சேமிப்புக் கணக்கில் போதுமான பணம் இருந்தும் காசோலையை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அதற்கான அபராதத் தொகையையும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, ராயப்பனின் சேமிப்பு கணக்கில் இருந்து பிடித்தம் செய்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராயப்பன் உடனடியாக‌ நுகர்வோர் அமைப்பு மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன்பின்னரும் வங்கியில் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் ராயப்பன் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட ராயப்பனுக்கு நஷ்டஈடு ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்