சுகாதாரத்துறை அதிகாரிகளின் தொடர் சோதனை: மேலும் 3 போலி டாக்டர்கள் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வந்த மேலும் 3 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-09 21:55 GMT

பேரம்பாக்கம்,

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலாங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அலோபதி மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த 5 போலி டாக்டர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

அதைதொடர்ந்து நேற்று திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மணவூர் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் கிளினிக் வைத்து எம்.பி.பி.எஸ். படிக்காமல் நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல் பேரம்பாக்கம் அருகே சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் ஓமியோபதி படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதாரத் துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தன.

போலி டாக்டர்கள் கைது

இதையடுத்து போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் பேரம்பாக்கம், கடம்பத்தூர் பகுதிகளில் உள்ள கிளினிக்குகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு முத்துசாமி மற்றும் மதன் ஆகியோரின் சான்றிதழ்களை சரிபார்த்தபோது, அவர்கள் எம்.பி.பி.எஸ். டாக்டருக்கு படிக்காமல் அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது உறுதியானது.

பொதுமக்களுக்கு போலியாக மருத்துவம் செய்து கொண்டிருந்த போலி டாக்டர்களான முத்துசாமி மற்றும் மதன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஊத்துக்கோட்டை

ஊத்துக்கோட்டையில் சுகாதார துறை அதிகாரி யுவராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் போலீசாருடன் சேர்ந்து ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொம்பரம்பேடு பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள பஸ் நிலையம் அருகே கிளினிக் நடத்தி வந்த ஊத்துக்கோட்டையை சேர்ந்த பொன்ராஜ் (48) என்பவரை அதிகாரிகள் பிடித்தனர். பி.ஏ. வரலாறு படித்த அவர், மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார். பொன்ராஜை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியில் கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் குழுவினர் மேற்கண்ட பகுதியில் ஆய்வு நடத்தினர். பாதிரிவேட்டில் கிளினிக் நடத்தி வந்த ராமலிங்கம், (வயது 57) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர் பி.எஸ்.சி., சைகாலஜி படித்து விட்டு அலோபதி மருந்துகள் மற்றும் ஊசிகளை, நோயாளிகளுக்கு பரிந்துரை செய்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்