ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் நோயாளிகளுக்கு தனிவார்டு
டெங்கு பரவல் எதிரொலியால் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் நோயாளிகளுக்கு தனிவார்டு 40 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.;
நாகர்கோவில்:
டெங்கு பரவல் எதிரொலியால் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் நோயாளிகளுக்கு தனிவார்டு 40 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
டெங்கு பரவல் அதிகரிப்பு
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு குமரி மாவட்டத்தில் பரவாமல் தடுக்க கேரள-குமரி எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. அதே சமயம் குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலும் அதிகரித்து வருகிறது. சராசரியாக வாரத்துக்கு 6 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனிவார்டு
இந்தநிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்புக்காக 40 படுக்கை வசதிகளுடன் கூடிய தனி வார்டு நேற்று திறக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தனியாக படுக்கைகளும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு உடையவர்களுக்கு கொசு வலை விரிக்கப்பட்ட தனி படுக்கைகளும் போடப்பட்டு உள்ளன.
காய்ச்சல் பாதிப்பால் தற்போது 14 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 2 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் நோயாளிகளுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் மூலிகை கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது.
புதிதாக திறக்கப்பட்ட வார்டை டீன் பிரின்ஸ் பயஸ், உறைவிட மருத்துவர் ஜோசப் சென் ஆகியோர் நேரில் பார்வையிட்டு தேவையான வசதிகளை ஏற்படுத்தும்படி அறிவுறுத்தினர்.