மாடல் அழகியின் புகைப்படத்தை அனுப்பி மயக்கினார்: திருமணம் செய்வதாக வாலிபரை ஏமாற்றி ரூ.9 லட்சம் மோசடி - ஆந்திர பெண் கைது
மாடல் அழகியின் புகைப்படத்தை அனுப்பி வாலிபரை மயக்கி திருமணம் செய்வதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த ஆந்திர மாநில பெண்ணை போலீசார் கைது செய்தனர்.;
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் அசோக் சைதன்யா (வயது 33). இவர், திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி, தனியார் கால் சென்டரில் பணிபுரிந்து வருகிறார்.
33 வயதாகியும் திருமணம் ஆகாததால் அசோக் சைதன்யா, தெலுங்கு திருமண தகவல் மையத்தில் மணமகள் தேவை என தனது சுயவிவரங்களை பதிவு செய்தார்.
அதை பார்த்த ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த மதனம்பள்ளியை ேசர்ந்த ஷரவண சந்தியா (33) என்பவர் தனது உண்மையான புகைப்படத்துக்கு பதிலாக சினிமா நடிகை போன்ற அழகான மாடல் அழகி ஒருவரின் புகைப்படத்தை அசோக் சைதன்யாவுக்கு அனுப்பி வைத்ததுடன், "நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக" ஆசை வார்த்தை கூறினார்.
புகைப்படத்தில் இருந்த மாடல் அழகியை பார்த்து மயங்கிய அசோக் சைதன்யா, அதன்பிறகு சந்தியாவிடம் தொடர்ந்து செல்போனில் பேசி வந்தார். நள்ளிரவில் மட்டுமே இருவரும் 'வாட்ஸ் அப்'பில் தகவல் பரிமாறி வந்தனர். ஆனால் தனது உண்மையான முகம் தெரிந்து விடும் என்பதால் சந்தியா வீடியோ காலில் பேச மறுத்துவிட்டார்.
சந்தியாவின் அழகில் மயங்கிய அசோக் சைதன்யா, அவர் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்து வந்தார். இவ்வாறு சுமார் ரூ.9 லட்சம் வரை அனுப்பியதுடன், தான் உபயோகித்து வந்த ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் சந்தியா சொன்ன முகவரிக்கு அசோக் சைதன்யா அனுப்பி வைத்துள்ளார்.
அதன்பிறகு அசோக் சைதன்யா தொடர்ந்து திருமணம் செய்வது குறித்து பேசும்போதெல்லாம் சந்தியா அதனை தவிர்த்து வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அசோக் சைதன்யா, ஒரு கட்டத்தில் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். அதன்பிறகு அவரது செல்போன் எண்ணை சந்தியா பிளாக் செய்து விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அசோக் சைதன்யா, இந்த மோசடி குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள இணையவழி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் இணையவழி குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சந்தியா குறித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர், கர்நாடக மாநிலம் பெங்களூரு மடிவாலா பகுதியில் உள்ள ஒரு தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் கடந்த 3 மாதங்களாக தங்கியிருப்பதும், தெலுங்கு திருமண தகவல் மையம் மூலம் அதிக வயதாகியும் திருமணமாகாத ஆண்களை குறிவைத்து, அவர்களை தனது வலையில் விழ வைத்தும், அதன் மூலமாக அவர்களை ஏமாற்றி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் ஷரவண சந்தியாவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர் பயன்படுத்திய லேப்டாப், 3 செல்போன்கள், 6 சிம் கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன் சமூக வளைதளத்தில் சந்தியா பயன்படுத்திய 8 மின் அஞ்சல் முகவரி மற்றும் டெலிகிராம் ஆப்பையும் போலீசார் முடக்கினர்.