ரெயில் கடந்தபோது பாம்பன் தூக்குப்பாலத்தில் சத்தம் எழுப்பிய சென்சார் கருவிகள்
பாம்பன் தூக்குப்பாலத்தை ரெயில் கடந்தபோது சென்சார் கருவிகள் சத்தம் எழுப்பியதால், முன் எச்சரிக்கையாக நேற்று ராமேசுவரம் வந்த ரெயில்கள் அனைத்தும் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்பட்டன.
ராமேசுவரம்,
பாம்பன் தூக்குப்பாலத்தை ரெயில் கடந்தபோது சென்சார் கருவிகள் சத்தம் எழுப்பியதால், முன் எச்சரிக்கையாக நேற்று ராமேசுவரம் வந்த ரெயில்கள் அனைத்தும் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்பட்டன.
பாம்பன் தூக்குப்பாலம்
ராமநாதபுரம் மாவட்டத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. கப்பல்கள் கடந்து செல்ல வசதியாக, ரெயில் பாலத்தின் நடுவே தூக்குப்பாலமும் உள்ளது. கப்பல்கள், விசைப்படகுகள் கடக்கும்போது மட்டும் தூக்குப்பாலம் திறக்கப்படும்.
அந்த தூக்குப்பாலம் வழியாக ரெயில்கள் செல்லும் போது அதில் ஏற்படும் அதிர்வுகளை கண்டறிய கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஐ.ஐ.டி வல்லுனர்கள், சென்சார் கருவிகளை பொருத்தினர்.
சத்தம் எழுப்பிய சென்சார்கள்
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.45 மணிக்கு பயணிகள் இல்லாமல் காலி பெட்டிகளுடன் ெரயில் ஒன்று தூக்குப்பாலம் வழியாக சென்றபோது திடீரென சென்சார்கள் சத்தம் எழுப்பின. உடனே அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த போது, தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வந்த சேது எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் மதுரையிலிருந்து ராமேசுவரம் நோக்கி வந்த பயணிகள் ரெயில், காலை 8.30 மணிக்கு ராமேசுவரம் வந்த சென்னை ரெயில் ஆகியவை மண்டபம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.
அதுபோல் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை ரெயில் ரத்து செய்யப்பட்டது.
திருச்சி ரெயில்
மதுரையிலிருந்து நேற்று காலை 10 மணிக்கு ராமேசுவரம் நோக்கி வந்த பயணிகள் ரெயில் ராமநாதபுரத்துடன் நிறுத்தப்பட்டு மீண்டும் அங்கிருந்து மதுரைக்கு இயக்கப்பட்டது.
திருச்சியில் இருந்து நேற்று பகல் 12 மணிக்கு வரவேண்டிய பயணிகள் ரெயிலும் ராமநாதபுரம் வந்து அங்கேயே நிறுத்தப்பட்டு மீண்டும் அங்கிருந்து திருச்சிக்கு இயக்கப்பட்டது.
செகந்திராபாத் ரெயில்
ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை செகந்திராபாத்துக்கு இயக்கப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் மண்டபம் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டது. அந்த ரெயிலில் செல்வதற்காக முன்பதிவு செய்த பயணிகள் அனைவரும் ராமேசுவரம் ெரயில் நிலையத்தில் இருந்து அரசு பஸ்களில் மண்டபம் அழைத்து வரப்பட்டனர்.
முன்னதாக ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட பெட்டிகளுடன் நிறுத்தி இருந்த அந்த ரெயிலானது நேற்று காலை 10 மணி அளவில் காலி பெட்டியாக ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு, பாம்பன் ரெயில் பாலம் மற்றும் தூக்குப்பாலம் வழியாக மெதுவாக கடந்தபடி மண்டபம் வந்தது. தொடர்ந்து நேற்று காலை 10.30 மணி அளவில் மண்டபத்திலிருந்து செகந்திராபாத்துக்கு பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.
நேற்று ராமேசுவரத்தில் இருந்து மாலை 6 மணிக்கு மதுரை புறப்படும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06656) ரத்து செய்யப்பட்டது. அத்துடன், ராமேசுவரத்தில் இருந்து திருப்பதி, சென்னை (மெயின்லைன், கார்டுலைன்), ஓகா கோட்டை ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் நேற்று மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன.
அதிகாரி விளக்கம்
இது பற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பாம்பன் ரெயில் பாலம் கட்டப்பட்டு சுமார் 105 ஆண்டுகளை கடந்து விட்டது. தூக்குப்பாலத்தில் ஏதேனும் அதிர்வுகள் உள்ளதா என்பதை கண்டறிய சென்னை ஐ.ஐ.டி தொழில்நுட்ப வல்லுனர்கள் 84 இடங்களில் சென்சார் கருவிகள் பொருத்தி உள்ளனர்.
ஒவ்வொரு முறையும் தூக்குப்பாலத்தை ரெயில் கடந்து செல்லும் போது அதிர்வுகள் அதிகம் உள்ளதா? என சென்சார் கருவிகளில் பதிவாகும். அதிகமான அதிர்வுகள் இருந்து சத்தம் வந்தால் ரெயில்கள் இயக்குவது நிறுத்தப்படும். இரவில் ரெயில் கடந்து சென்றபோது, அதிக அதிர்வுகள் உள்ளதாக சென்சாரில் இருந்து சத்தம் வந்துள்ளது. எனவே முன்எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக தூக்குப்பாலம் வழியாக பயணிகளுடன் ரெயில் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் பாம்பன் தூக்கு பாலத்தை நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். இப்போது ஏற்பட்டு இருக்கும் தொழில்நுட்ப கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்ட பின்னர் விரைவில் தூக்குப்பாலம் வழியாக வழக்கம்போல் ராமேசுவரத்திற்கு பயணிகளுடன் ரெயில் போக்குவரத்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பலத்த காற்று
கடந்த சில நாட்களாகவே பாம்பன் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதுடன், கடல் சீற்றமாக காணப்படுகிறது. அதனாலும் சென்சார் கருவியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.