பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரம்
ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.;
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தற்போது பள்ளி மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறையில் இருக்கின்றனர். வருகிற ஜூன் 1-ந்தேதி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இது தொடர்ந்து நீடிக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படுமா? என்று மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில் ஏற்கனவே அறிவித்த தேதிகளில் பள்ளிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனவே வரும் ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறப்பது உறுதியாக உள்ளது.
பாட புத்தகங்கள் அனுப்பும் பணி
இந்நிலையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட உபகரணங்களை பள்ளி திறக்கும் நாள் அன்றே வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை தீவிரமான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அந்த வகையில், கரூரில் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உத்தரவின்பேரில் கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாவட்ட புத்தகங்கள் வினியோக மையத்தில் இருந்து அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வரையிலான பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.