விலை வீழ்ச்சியால் குப்பையில் கொட்டப்பட்ட செண்டி பூக்கள்
விலை வீழ்ச்சியால் செண்டி பூக்கள் குப்பையில் கொட்டப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது செண்டி பூக்கள் விளைச்சல் அதிகமாக உள்ளது. ஆனால் உரிய விலை இல்லை. பூக்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. புதுக்கோட்டை பூ மார்க்கெட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செண்டி பூ கிலோ ரூ.450-க்கு மேல் விற்பனையானது. ஆனால் நேற்று கிலோ ரூ.6 முதல் ரு.10 வரை விற்றது. விவசாயிகள் விற்பனைக்காக செண்டிப்பூக்களை அதிகளவில் கொண்டு வந்தனர். அதனை வாங்கி செல்வதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் அதிகமாக முன்வரவில்லை.
விலை வீழ்ச்சியின் காரணத்தோடு, விற்பனையும் இல்லாததால் ஏலக்கடைக்கு கொண்டு வந்த செண்டி பூக்களை பூ மார்க்கெட் அருகே சாலையோரம் குப்பையில் விவசாயிகள் கொட்டினர். இந்த அவல நிலையை கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.
பூக்கள் உற்பத்தி அதிகமாக இருக்கிற காரணத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இத்தொழிற்சாலை அமைந்தால் பூக்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இதுபோன்ற விலை இல்லாத நேரத்தில் பூக்கள் குப்பையில் கொட்டப்படுவது தடுக்கப்படும். எனவே வாசனை திரவிய தொழிற்சாலையை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலர் விவசாயிகள் தரப்பிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.