புத்தக திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் புத்தக திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-02-28 18:45 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் முறையாக அரசின் சார்பில் புத்தகத்திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை தூண்டும் விதமாகவும், அறிவார்ந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காகவும் மாவட்டங்களில் புத்தகத்திருவிழா நடத்த உத்தரவிட்டுள்ளார்.

80 புத்தக அரங்குகள்

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் இந்த மாதம் புத்தகத்திருவிழா நடைபெறவுள்ளது. புத்தகத்திருவிழா நடைபெறும் இடம் மற்றும் நடைபெறவுள்ள நாட்கள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இப்புத்தக திருவிழாவில் 80 புத்தக அரங்குகள், பள்ளி -கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள், உள்ளூர் பிரமுகர்கள் எழுதிய புத்தகங்கள் வெளியிடுதல், உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து சிறப்பு பேச்சாளர்களை அழைத்து சொற்பொழிவு நடத்தச்செய்தல், துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள அரசின் சாதனை விளக்க கண்காட்சி அரங்குகள் அமைத்தல் போன்ற முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் புத்தகத்திருவிழா நடைபெறும் இடம் மற்றும் நாட்கள் குறித்த விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ராவிஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஸ்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்