கரும்பு, காய்கறி, பூக்கள் விற்பனை மும்முரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காய்கறி, பூக்களின் விற்பனை படுஜோராக இருந்தது. மல்லிகை பூவானது, ஒரு கிலோ ரூ.3500-க்கு விற்பனையானது.

Update: 2023-01-14 18:45 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காய்கறி, பூக்களின் விற்பனை படுஜோராக இருந்தது. மல்லிகை பூவானது, ஒரு கிலோ ரூ.3500-க்கு விற்பனையானது.

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க ஏராளமான மக்கள் மதுரை சந்தைகளில் கூட்டம் கூட்டமாக நேற்று திரண்டு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். அவர்களின் பெரும்பாலானோர் கரும்பு, வாழைப்பழம், காய்கறிகள், மஞ்சள் குலைகள் உள்ளிட்ட பொருட்களை அதிக அளவில் வாங்கி சென்றனர். இதனால் அந்த பொருள்களின் விற்பனை படுஜோராக இருந்தது.

மதுரையில், சுமார் 7 அடி உயரம் கொண்ட தடிமன் அதிகமான கரும்பு ஒன்று ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையானது. இதுபோல் 15 கரும்புகளை கொண்ட ஒரு கட்டு ரூ.450 முதல் ரூ.550 என்ற விலையில் விற்பனையானது. உயரம் மற்றும் தடிமன் குறைந்த கரும்பு ஒரு கட்டு ரூ.250 முதல் ரூ.300 வரையில் விற்பனை ஆகின. மஞ்சள் குலைகளை பொறுத்தவரையில் ஒரு ஜோடி ரூ.50 என விற்பனை ஆகியது. பெரிய இலைகளுடன் உள்ள மஞ்சள் குலை ஜோடி ரூ. 100 வரை விற்பனை ஆகியது.

பூக்கள் விலை

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் கடந்த சில தினங்களாக பூக்களின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3500-க்கு விற்பனை ஆனது. இதுபோல் முல்லை மற்றும் பிச்சிப்பூவும் ஒரு கிலோ ரூ.2500-க்கு விற்பனையானது. பொங்கல் பண்டிகை காரணமாக பூக்களின் தேவை அதிகம் என்பதால் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பூக்களை வாங்கி சென்றனர்.

இதுபோல் கனகாம்பரம், சம்பங்கி, அரளி, செவ்வந்தி போன்ற பூக்களின் விலையும் பல மடங்கு உயர்ந்திருந்தது. பொங்கல் பண்டிகைக்கு பின்னர் பூக்களின் விலை படிப்படியாக குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

காய்கறி

இதுபோல், காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.40, கேரட் ரூ.60, உருளைக்கிழங்கு ரூ.50, கத்தரி ரூ.50, சின்னவெங்காயம் ரூ.80, பெரிய வெங்காயம் ரூ.40 என விற்பனையானது. கடந்த சில தினங்களை பார்க்கும் போது காய்கறிகளின் விலையும் பொங்கல் பண்டிகை காரணமாக விலை உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பண்டிகை வியாபாரம் காரணமாக, மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட், சிம்மக்கல், வடம்போக்கி வீதி, தயிர் மார்க்கெட், வெற்றிலை மார்க்கெட் போன்ற பகுதிகளில் இந்த பொருட்கள் வாங்குவதற்கு அதிக அளவில் மக்கள் திரண்ட காட்சிகளை காணமுடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்