முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு சமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் தேர்வு

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு சமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Update: 2023-05-11 18:45 GMT

தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை அரியலூர் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செயல்படுத்தும் பொருட்டு காலை உணவு தயாரிக்க கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சி அளவிலான முதன்மை குழு மூலம் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் சில நிபந்தனை மற்றும் தகுதிகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குழுவில் சேர்ந்து 3 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் பெற்ற கடன்களை தவணை தவறாது நிலுவையின்றி செலுத்தியிருக்க வேண்டும். மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் அதே ஊராட்சியில், பேரூராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும். மகளிர் சுய உதவி குழு உறுப்பினரின் குழந்தை அதே தொடக்கப்பள்ளியில் படிக்க வேண்டும். அக்குழந்தை அப்பள்ளியில் தொடக்க படிப்பு முடிந்து வேறு பள்ளிக்கு சென்று விட்டால் அச்சுய உதவிக்குழு உறுப்பினர் காலை உணவு தயாரிப்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, வேறு மேற்கண்ட தகுதிக்குட்பட்ட சுய உதவி குழு உறுப்பினர் தேர்வு செய்யப்படுவார். மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். உணவு சமைப்பதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் தங்கள் பெயரில் இணைய வசதியுடன் கூடிய செல்போன் வைத்திருக்க வேண்டும். அதனை இயக்க தெரிந்திருக்க வேண்டும். இப்பணி முற்றிலும் தற்காலிகமானதாகும், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்