போலீஸ்காரர் குடும்பத்துக்கு விபத்து நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

பெரியகுளத்தில் போலீஸ்காரர் குடும்பத்துக்கு விபத்து நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2023-04-25 21:15 GMT

உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைப்புரத்தை சேர்ந்தவர் வனராஜன். இவர் ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். கடந்த 1998-ம் ஆண்டு கோவை சூலூர் பகுதியில் தேர்தல் பணிக்காக வனராஜன் சென்றார். பின்னர் அங்கு பணி முடிந்து அரசு பஸ்சில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஓடும் பஸ்சில் இருந்து தவறிவிழுந்து வனராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதையடுத்து அவரது மகன்கள் செல்வகுமார், சதீஷ்குமார் ஆகியோர் விபத்து நஷ்டஈடு கேட்டு பெரியகுளத்தில் உள்ள மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி, விபத்து நஷ்டஈடாக ரூ.15 லட்சத்து 950 வழங்க கோவை அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நஷ்டஈடு தொகை 2 தவணைகள் வழங்கப்பட்டது. ஆனால் பாக்கி தொகை ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்து 876 வழங்கப்படவில்லை.

இதனால் வனராஜனின் மகன்கள், பெரியகுளம் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கணேசன், கோவை மண்டல போக்குவரத்துக்கழக அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று மதியம் திருப்பூரில் இருந்து தேனி நோக்கி கோவை மண்டல அரசு பஸ் ஒன்று பெரியகுளத்துக்கு வந்தது. அப்போது கோர்ட்டு அமினா ரமேஷ், பெரியகுளம் புதிய பஸ் நிலையம் பிரிவு அருகே வந்த பஸ்சை ஜப்தி செய்தார். பின்னர் அந்த பஸ் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்