ஒகேனக்கல் மார்க்கெட்டில்300 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

ஒகேனக்கல் மார்க்கெட்டில் 300 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2023-04-18 19:11 GMT

ஒகேனக்கல்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்துக்கு தினமும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்வர். பின்பு அங்கு சமைக்கப்படும் சுவையான மீன் குழம்பை விரும்பி சாப்பிட்டு செல்வர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிக்கவே சமையலின் தரமும் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒகேனக்கல் மீன் மார்க்கெட்டில் பழைய மீன்கள் விற்கப்படுவதாக சுற்றுலா பயணிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்திருந்தனர்.

அழுகிய மீன்கள்

இந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி, ஒகேனக்கல் மீன்வள ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வள பணியாளர்கள் நேற்று திடீரென ஒகேனக்கல் மீன் விற்பனை கூடம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல கடைகளில் இருந்து சர்வ சாதாரணமாக தரமற்ற முறையில் அழுகிய நிலையில் இருந்த 300 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை உணவுத்துறை அதிகாரிகள் குழி தோண்டி புதைத்தனர். இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் மீன் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி மீண்டும் இதுபோல் அழுகிய நிலையில் உள்ள மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்