நாமக்கல் மாவட்டத்தில் ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 113 வாகனங்கள் பறிமுதல்-வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 113 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-08-10 18:06 GMT

நாமக்கல்:

வாகன சோதனை

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவின்படி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகன சோதனை மேற்கொண்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த மாதம் நாமக்கல் வடக்கு, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன் ஆகியோர் தலைமையில், திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பகுதி அலுவலகங்களின் மோட்டார் வாகன ஆய்வாளர்களால் 4,443 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.

அதில் 870 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. மேலும் ரூ.9 லட்சத்து 89 ஆயிரத்து 982 வரியும், ரூ.9 லட்சத்து 21 ஆயிரத்து 375 அபராதமும் வசூலிக்கப்பட்டது. அதேபோல் போக்குவரத்து விதிகளை மீறிய 477 வாகனங்களுக்கு ரூ.24 லட்சத்து 85 ஆயிரத்து 700 அபராதம் நிர்ணயம் விதிக்கப்பட்டது.

113 வாகனங்கள் பறிமுதல்

இந்த வாகன சோதனையின் போது தகுதிச்சான்று புதுப்பிக்காமல், அனுமதிசீட்டு இல்லாமல், வரி செலுத்தாமல் போக்குவரத்து விதிமுறைகளை மீறி, உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 113 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த தகவலை வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்