அடுத்த தலைமுறைக்கு நஞ்சில்லா உணவுகளை தர வேண்டும் என்பதற்காக பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் குழு சார்பில் 6-ம் ஆண்டு விதைத்திருவிழா வெங்கடேசபுரத்தில் நேற்று நடந்தது. திருவிழாவில் விவசாயிகள், பொதுமக்களின் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் பல்வேறு பாரம்பரிய மரபு நெல் விதைகள், நாட்டு காய்கறிகளின் விதைகள், கீரை, கம்பு, கேழ்வரகு, பனிவரகு, குதிரை வாலி, தினை, சாமை ஆகியவற்றின் விதைகளும் வைக்கப்பட்டிருந்தன. இதனை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும், வெளியூரை சேர்ந்தவர்களும் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு, தங்களுக்கு தேவையான விதைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர். மேலும் விதைத்திருவிழாவில் இயற்கை வேளாண்மைக்கான இடு பொருட்கள், இயற்கை உரங்களான மண்புழு உரம், இயற்கை முறையில் தயாரித்த உணவு வகைகள் மற்றும் துணிப்பைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. விதை திருவிழாவில் இயற்கை உணவுகள், உணவு பொருட்கள், மூலிகைகள் மற்றும் விவசாயம் சம்பந்தமான புத்தக கண்காட்சியும் நடைபெற்றது. மேலும் நீர் மேலாண்மை, மரபு நெல் சேகரிப்பு, நாட்டு விதை, மரக்கன்று வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, கீரை வளர்ப்பு என்கிற பல்வேறு தலைப்புகளில் வேளாண்மை வல்லுனர்கள் கருத்துரையாற்றினர். முன்னதாக விழா அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த இயற்கை வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வாரின் உருவ படத்திற்கு விவசாயிகளும், பொதுமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.