மகாமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா
தே.கோபுராபுரம் மகாமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடைபெற்றது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் செடல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், சாமி வீதிஉலாவும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான செடல் திருவிழா நடந்தது.
முன்னதாக ஆதி சக்தி ஈஸ்வரர் கோவில் குளத்தில் பக்தர்கள் சக்தி கரகம், பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும், செடல் போட்டுக்கொண்டும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வயலூர்
இதேபோல் விருத்தாசலம் 1-வது வார்டு வயலூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத செடல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், செடல் அலகுகள் போட்டும், ஊர்வலமாக வயலூர் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.