புரோட்டா கடை குடோனுக்கு `சீல்'
புரோட்டா கடை குடோனுக்கு அதிகாரிகள் `சீல்' வைத்து சென்றனர்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு புரோட்டா கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரி கனகசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் சோதனைக்காக சென்றனர். அப்போது அதிகாரிகளை கண்டதும் கடை ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள குடோனுக்கு ஆய்வு நடத்த சென்றனர். ஊழியர்கள் அதையும் பூட்டி விட்டு சென்று விட்டனர். பிறகு அந்த கடைக்கு பின்புறம் உள்ள குழம்பு தயாரிக்கும் இடத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதன்பின்னர் கிராம நிர்வாக அலுவலர் செல்வி மற்றும் செங்கோட்டை போலீசார் முன்னிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த புரோட்டா கடை குடோனுக்கு `சீல'் வைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.