ஆழ்வார்பேட்டை கேளிக்கை விடுதி கட்டிடத்துக்கு 'சீல்' - சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

ஆழ்வார்ப்பேட்டையில் விபத்து நடைபெற்ற கேளிக்கை விடுதி கட்டிடத்தை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2024-03-28 17:41 GMT

சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் மேற்கூரை, இன்று இரவு எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடலை மீட்கும் பணியில் போலீசார் மற்றும் கமாண்டோ படையினர் ஈடுபட்டனர்.

இந்த சூழலில் ஜே.சி.பி. இயந்திரங்களின் உதவியுடன், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அபிராமபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த மூவரும் வடமாநில தொழிலாளர்கள் என்று முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆழ்வார்ப்பேட்டையில் விபத்து நடைபெற்ற கேளிக்கை விடுதி கட்டிடத்தை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "2 ஆயிரத்து 400 சதுரடி உடைய இந்த கேளிக்கை விடுதியின் 10-க்கு 10 அடி உள்ள மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் துரதிருஷ்டவசமாக 3 பேர் சிக்கி கொண்டு பலியாகி உள்ளனர். இவர்கள் இந்த கேளிக்கை விடுதியின் ஊழியர்கள் ஆவார்கள்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து நான் பொத்தாம் பொதுவாக கூற முடியாது. முழுமையான விசாரணைக்கு பின்னர் தெரிய வரும். விபத்தில் பலியான 2 பேர் மணிப்பூரை சேர்ந்தவர்கள். ஒருவர் திருச்சியை சேர்ந்தவர். விபத்து நடைபெற்ற கட்டிடத்தின் உரிமையாளர் உள்பட அனைவரிடமும் அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். விபத்து நடைபெற்ற கேளிக்கை விடுதி கட்டிடத்துக்கு 'சீல்' வைக்கப்படும்" என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதனிடையே கலால் வரி கமிஷனர் ஜெயகாந்தன், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன உயர் அதிகாரிகளும் விபத்து நடைபெற்ற கேளிக்கை விடுதியை ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்