மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலுக்கு 'சீல்' வைப்பு

விழுப்புரம் அருகே மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலில் ஒருதரப்பினர் வழிபட அனுமதி மறுத்ததால் பதற்றமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து கோவிலுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Update: 2023-06-07 18:45 GMT

விழுப்புரம்

வழிபாட்டுக்கு அனுமதி மறுப்பு

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது ஒரு சமூகத்தினர் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் அந்த சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கோவிலுக்குள் சென்ற போது, மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அந்த வாலிபரை தாக்கியதாக தெரிகிறது.

இதனால் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுப்பதை கண்டித்தும், வாலிபர் தாக்கப்பட்டதை கண்டித்தும் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இதை அறிந்த போலீசார் விரைந்து வந்து கூட்டத்தை கலைத்தனர். மேலும் இப்பிரச்சினை தொடர்பாக கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட கலெக்டர் பழனி ஆகியோர் தலைமையில் அடுத்தடுத்து 8 முறை அமைதி கூட்டம் நடத்தினர். ஆனால் இதுவரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.

போலீஸ் குவிப்பு

இந்த நிலையில் இருதரப்பினரும் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியானதால் அங்கு சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேல்பாதி கிராமத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் மேற்பார்வையில் டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் ஆகியோரின் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மேல்பாதி கிராமத்தின் வழிநெடுகிலும், கிராமத்தையொட்டியுள்ள விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும் போலீசார், வஜ்ரா, வருண் உள்ளிட்ட வாகனங்களுடனும், தற்காப்பு உபகரணங்களுடனும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவிலுக்கு 'சீல்'

இதற்கிடையே விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், நேற்று காலை 6 மணியளவில் மேல்பாதி கிராமத்திற்கு சென்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன், பிரச்சினைக்குரிய கோவிலை பூட்டி 'சீல்' வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இருப்பினும் அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி கூட்டத்தை கலைத்தனர்.

குற்றவியல் நடவடிக்கை

பின்னர் கோவில் சுவரில் அதிகாரிகள் நோட்டீசு ஒன்றை ஒட்டினர். அதில், இரு தரப்பு விசாரணை முடிந்து, இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை இக்கோவிலுக்குள் இரு தரப்பினரும் மற்றும் அவர்களை சார்ந்தவர்களும் செல்லக்கூடாது என்றும், இந்த உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும், மீறுவோர் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

145 தடை உத்தரவு

மேலும் கோவில் அமைந்துள்ள பகுதியில் குற்றவியல் நடைமுறை சட்டப்படி 145 விதியின் கீழ் காவல்துறையினரால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் கோவில் அருகில் இருதரப்பினரும் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் போராட்டம் அறிவிப்பால் விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

வெளியூர் நபர்களுக்கு தடை

பதற்றமான சூழ்நிலையின் காரணமாக மேல்பாதி கிராமத்தையே போலீசார் தங்களது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வேலை விஷயமாகவும், அத்தியாவசிய தேவைக்காகவும் வெளியே சென்று வரவும், அதுபோல் வெளியில் இருந்து கிராமத்திற்குள் வருபவர்களிடமும் அவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண், வாகன எண் உள்ளிட்ட விவரங்களை போலீசார் பதிவு செய்து உள்ளே அனுப்பி வருகின்றனர். மேலும் வெளியூரை சேர்ந்தவர்கள் யாரையும் மேல்பாதி கிராமத்திற்குள் அனுமதிக்காமல் போலீசார் தடை விதித்து தடுப்புகள் அமைத்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்