தனுஷ்கோடி பகுதியில் பயங்கர கடல் சீற்றம்

தனுஷ்கோடி பகுதியில் கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது.

Update: 2022-07-03 17:05 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடல் பகுதி உள்ளது. இந்த கடல் பகுதி வழக்கமாகவே கடல் சீற்றம் மற்றும் அதிக நீரோட்டம் உள்ள பகுதியாகும். இந்தநிலையில் தனுஷ்கோடி கடல் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரையிலும் வழக்கத்திற்கு மாறாக கடல் பயங்கர சீற்றமாக காணப்பட்டது. குறிப்பாக கம்பிப்பாடு- அரிச்சல்முனைக்கு இடைப்பட்ட சாலை பகுதியில் கடல் நீரானது தடுப்பு சுவரில் மோதி சாலை வரையிலும் வந்துள்ளது. கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் தடுப்பு சுவரின் கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் ஜல்லிக்கற்களை கொட்டியது போல் பரவி கிடந்தன.

பலத்த சூறாவளி காற்றால் அரிச்சல்முனை அருகே சாலையில் பல இடங்களில் சாலையே தெரியாத அளவிற்கு மணலால் மூடப்பட்டு இருந்தது. அரிச்சல்முனை அருகே சாலை முழுவதும் தடுப்புச் சுவரின் கற்கள் பரவி கிடப்பதால் அரிச்சல்முனை வந்த கார், ஆட்டோ உள்ளிட்ட ஏராளமான வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர். தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தால் இதுவரை இல்லாத அளவிற்கு தடுப்புச் சுவர்களின் கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் பரவி கிடந்ததை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்