கடல்நீர்மட்டம் தாழ்வு: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்
கடல்நீர்மட்டம் தாழ்வு காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமாகியுள்ளது.
கன்னியாகுமரி,
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.
பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது.
இந்தநிலையில் இன்று வழக்கம்போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக தொடங்கப்படவில்லை. கடலின் தன்மையை பொறுத்து 10 மணிக்கு மேல் சுற்றுலா படகு சேவை ஆரம்பிக்கபடும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதனால் படகு சவாரி செய்ய ஆவலுடன் வந்த சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர்.