நிதி நிறுவன ஊழியருக்கு அரிவாள் வெட்டு

ஆலங்குடியில் தனியார் நிதிநிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-06-09 18:37 GMT

தகராறு

புதுக்கோட்டை வேங்கைகொல்லை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 47). இவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனத்தில் ஆலங்குடி கலிபுல்லா நகரை சேர்ந்த சோபியா நிஷா என்பவர் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அந்த பணத்தை வசூல் செய்வதற்காக சோபியா நிஷா வீட்டிற்கு திருப்பதி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சோபியா நிஷாவின் கணவர் ஜாகீர் உசேன் மற்றும் அவரது நண்பரான ஆலங்காட்டை சேர்ந்த சேகர் என்கிற பாச்சா சேகர் ஆகியோர் வீட்டின் வெளியே நின்று பணம் கேட்கக்கூடாதா? என்று கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அரிவாள் வெட்டு

இதில் ஆத்திரம் அடைந்த ஜாகீர் உசேன், சோபியா நிஷா ஆகியோர் திருப்பதியை கீழே தள்ளினர். பின்னர் ஜாகீர் உசேன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திருப்பதியின் கையில் சரமாரியாக வெட்டினார். மேலும் திருப்பதி வந்த மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளார். இதையடுத்து கையில் பலத்த காயம் அடைந்த திருப்பதியை அப்பகுதி மக்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து திருப்பதி அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஜாகீர் உசேனை வலைவீசி தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்